பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை….
திருச்சி நீதிமன்றத்தில் தீர்ப்பு...
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள வளன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சகாயமேரி ( வயது 35). கூலித்தொழிலாளியான இவர் கணவனை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி, இவரது வீட்டுக்குள் 4 மர்ம நபர்கள் திடீரென நுழைந்து சகாயமேரி மற்றும் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சகாயமேரி அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டதோடு வீட்டிலிருந்த ஏடிஎம் கார்டு, செல்போன், இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றனர். மேலும், ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்று ரூ.9,000 எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.இதுதொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் சகாயமேரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிலைய ஆய்வாளராக பணியாற்றிய கோடிலிங்கம் (தற்போது ஏடிஎஸ்பியாக வெளியூரில் உள்ளார்) தலைமையிலான போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா (27), சபீர் முகமது (36), சாதிக்பாட்ஷா (36), செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த முனீர்அகமது (30) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று ( 26.09.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். அபராதத்தொகை ரூ.40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஹேமந்த் ஆஜரானார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.