திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் :இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும்…* நீதிபதிகள் எச்சரிக்கை..!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் aமகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான தாமிரக் கொப்பரை ஆண்டுதோறும் சுத்தம் செய்யப்பட்டு, தீபம் ஏற்றுவதற்காகத் தயார் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்காகத் தாமிரக் கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 150 மீட்டர் நீளமுள்ள திரி உள்ளிட்ட தேவையான பொருட்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலும், தீபத்தூண் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை உச்சியில் நடைபெற உள்ள மகா தீப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பக்தர்களின் மத உரிமையை நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும்,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் மீற மாட்டோம் என்றும், அதேநேரத்தில் அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம் அல்லவா என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்தி வைத்தனர்.


Comments are closed.