Rock Fort Times
Online News

ஓசூர் அருகே சொகுசு பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.30 லட்சம் மற்றும் நகைகள் பறிமுதல்…!

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (08-04-2024) அதிகாலை 3 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹைதராபாத்திலிருந்து கோவை சென்ற சொகுசுப் பேருந்தை சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆபரண தங்க நகைகளை சார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரியங்கா மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் தங்கக் கட்டிகள், நகைகள் ஆகியவற்றை சிறிய லக்கேஜ் பேக்கில் எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்