Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்காத சாலைகள்- ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் அவதி…! ( வீடியோ இணைப்பு)

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்றிலிருந்து (11-12-2024) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல திருச்சியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான ஸ்ரீரங்கம், உறையூர், தில்லை நகர், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் மற்றும் டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக திருச்சியின் அடையாளங்களில் ஒன்றான மலைக்கோட்டையே மக்களின் கண்களுக்கு தெரியாதவாறு மறைந்திருந்தது. இது ஒரு புறம் இருக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் முன்பாக மழை நீர் தேங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக தான் கோவிலுக்கு செல்வார்கள். இதனால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். ஒரு நாள் மழைக்கே திருச்சி மாநகர சாலைகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் கனமழை பெய்தால் திருச்சி நிலைமை என்ன ஆகுமோ என தெரியவில்லை. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்