Rock Fort Times
Online News

தூர்வாரப்பட்ட திருச்சி தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்… மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு..! (வீடியோ இணைப்பு)

உலக பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மாநகரின் மையப்பகுதியான என்.எஸ்.பி.ரோடு வணிக வளாகங்களுக்கு இடையே அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர கடைகள் ஆக்கிரமித்ததாலும், பிளாஸ்டிக் மற்றும் கழிவுநீர் கலப்பாலும் குளம் பொலிவிழந்தது. சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை யடுத்து சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தச் சீரமைப்புப் பணியால் திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், குளத்தை தூர் வாரியதோடு சரி அதன்பிறகு எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் குளத்தில் மீண்டும் கழிவுநீர் தேங்கி வருகிறது. மரம், செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன

மாநகராட்சி ஆணையரிடம் மனு  :

இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணியிடம், மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில் சிராப்பள்ளி சீர்பாதம் தாங்கிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:-

நாங்கள், தாயுமான சுவாமி திருக்கோயில் சீர் பாத தாங்கிகளாக உள்ளோம். திருக்கோயில் திருவிழா காலங்களில் மலையில் இருந்து சுவாமியை கீழே இறக்கி திருவீதி உலா வந்து சுவாமியை மலை மேல் ஏற்றும் தொண்டினை செய்து வருகிறோம். எங்களது கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மே மாதம் 15-ம் தேதி மாநகராட்சி மற்றும் திருச்சிராப்பள்ளி வணிகர் சங்கம் இணைந்து தெப்பக்குளத்தை தூர் வாரும் பணியை மேற்கொண்டது. தூர்வாரும் பணிகள் ஜூன் மாத இறுதியில் நிறைவு பெற்ற நிலையில் இதுவரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப வில்லை. தற்போது குளத்தில் அதிகமான மரம், செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக காவிரியில் இருந்து நேரடியாக குளத்திற்கு தண்ணீர் வரும் வசதியானது இருந்தது. காலப்போக்கில் அதிகமான வணிக கட்டிடங்கள் கட்டப்பட்ட காரணத்தினால் அதுவும் நின்று போனது. இன்னும்
ஐந்து மாதங்களில் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த தெப்பக்குளத்தில் தான் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆகவே, தெப்பக்குளத்தில் உள்ள மரம், செடி கொடிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தெப்பக்குளத்தின் துணை குளங்களாக உள்ள நாகநாத சுவாமி கோயில் குளம், மலைக்கோட்டை உக்குளம் போன்ற குளங்களில் தண்ணீர் மட்டமானது உயரும். மேலும் உடைந்து கிடக்கும் குளங்களின் படிக்கட்டுகளையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்