ஆசிய கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.. தங்க மெடலுக்காக 3-ம் தேதி பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டு..!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டு பூங்காவில் இன்று(01-10-2026) நடைபெற்ற கிரிக்கெட் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சூர்யவன்சி மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஒரு சிக்சர் விளாசிய அபிஷேக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய சூர்யவன்சி அதிரடி காட்டினார். இந்தநிலையில் சாம்சன் 7 ரன்களில் தரிந்த் ரத்நாயக்க பந்தில் போல்டானார். அடுத்து ஷ்ரேயாஸ் களமிறங்கினார். இருவரும் சிறப்பாக ஆட்டத்தை தொடர்ந்தனர். அதிரடியாக பவுண்டரிகள் விளாசிய சூர்யவன்சி 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகள் மற்ற்ம் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஆடிய ஷ்ரேயாஸ் 13 ரன்களில் வனுஜா சஹான் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 8 ரன்களிலும், திலக் வர்மா 2 ரன் களிலும் ஷிவம் துபே 3
ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். ஆனால், இஷான் பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இஷான் 46 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இலங்கை அணி 9.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா, அக்சர் மற்றும் அபிஷேக் தலா 2 விக்கெட்களையும், வாஷிங்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி இறுதிப்போட்டியில்
பாகிஸ்தானுடன் வருகிற 3- ம் தேதி மோதுகிறது.

Comments are closed.