மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை-பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பட்டினியால் வாடும் அவலம்(வீடியோ இணைப்பு)…
ஏழை, எளிய மக்கள் பசியோடு தூங்க கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்றவையும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூண்டி ஒன்றியம் மேலசிலாவரை என்ற பகுதியில் உள்ள ரேஷன் கடை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் எந்த தேதியில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்படுவதும் கிடையாது. இதனால் இந்த ரேஷன் கடை இன்று திறக்கப்படுமா? நாளை திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்த மாதம் இது நாள் வரை இந்த ரேஷன் கடை திறக்கப்படவில்லை. இதனால், இந்த ரேஷன் கடையை நம்பி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்த பொருளும் கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் விவசாய வேலைக்கு சென்று வருகிறோம். அதில் கிடைக்கும் கூலியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலசிலாவரையில் உள்ள ரேஷன் கடை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது.
அதுவும் எந்த தேதியில் திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் தினமும் ரேஷன் கடையை வந்து பார்த்து சென்ற வண்ணம் உள்ளோம். இந்த மாதம் இது நாள் வரை ரேஷன் கடை திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் வீட்டில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற எதுவுமே இல்லை. மண்ணெண்ணெய்யும் ஒரு சொட்டு கூட இல்லை. இதனால் எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. தினமும் பசி பட்டினியால் தூங்குகிறோம்.
ஆகவே, இந்த ரேஷன் கடையை வாரம் ஒரு முறை திறந்து பொருட்கள் எடை குறையாமல் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பாஜக ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் எஸ்.பி.சரவணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் செயல்படுகிறது. ஆனால், மேல சிலாவரையில் உள்ள ரேஷன் கடை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் ரேஷன் பொருட்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, இந்த ரேஷன் கடையை வாரத்திற்கு ஒரு முறையாவது திறந்து அவர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வழிவகை காண வேண்டும் என்றார்.
Comments are closed.