Rock Fort Times
Online News

முதல்வர் விஜய்யை முருகப் பெருமானுடன் ஒப்பிட்டு பாடவில்லை விளக்கமளித்தார், புஷ்பவனம் குப்புசாமி…!

அண்மையில் திருச்செந்தூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன. முருகப்பெருமானையும், தமிழக முதல்வரையும் ஒப்பிட்டு அவர் பாடியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி வீடியோ மூலம் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதிர் அவர் கூறியிருப்பதாவது;

“திருச்செந்தூரில் நடந்த இசைக் கச்சேரியில் நான் பாடிய பாடலைக் குறை சொல்லிப் பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவிற்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
பாராட்டுகின்ற நீங்கள் தானே திட்டுகிறீர்கள். ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும். நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான்: ‘நம் தமிழக முதல்வர் போல் (அங்கே கமா இருக்கிறது), வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால்…’ என்றுதான் பாடினேன். யார் வேண்டிக் கொண்டால்? நம் தமிழக முதல்வர் போல் வேண்டிக் கொண்டால்! யாரிடம்? வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு! இப்பொழுது புரிகிறதா? யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாமும் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். ‘வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டு வரம் கேளுங்கள், வெற்றி உண்டு பாருங்கள்’ என்பதுதான் அந்தப் பாடல். வெற்றி எப்படி நிச்சயம் என்பதற்கு ஒரு சாட்சி வேண்டும் என்பதற்காகத்தான் அவரை நான் சாட்சியாகச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் வேண்டுவரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள். முருகனுக்கு ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். தமிழறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முருகனுடன் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது? சாட்சியாகத்தான் நான் அவரை வைத்திருக்கிறேன்; முருகனுடன் நான் ஒப்பிடவில்லை. முருகப்பெருமானுடைய அருள் பேரருள்; அதற்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாரும் இல்லை. ஆகவே இதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் ஒப்பிடவோ, யாரையும் குறை சொல்லவோ இல்லை. முருகப்பெருமானைப் பாடியிருக்கிறேன், அவ்வளவுதான். இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டு விடுங்கள்.” இவ்வாறு புஷ்பவனம் குப்புசாமி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்