30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருகிற 9-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு ஆரம்பம் முதலே திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடித்து வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் 16, திமுக 12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரென அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கவில்லை. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. திமுக தரப்பில் ஒரு தொகுதி ஒதுக்க முன்வந்த போதிலும் இதுவரை எந்த தொகுதி என்பது உறுதியாகவில்லை. தொகுதி எது என இதுவரை முடிவாகாததால் நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.