திருச்சி, புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே கண் பார்வையற்றோர் மாணவ, மாணவிகள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வந்த மாணவி ஒருவர் அண்மையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பார்வையற்ற பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி மர்ம மரணம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்து உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் பார்வை குறைபாடுடைய மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்த தேவையான தகுதி உடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நிர்வாக சிரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று( மார்ச் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வரதராஜன், சந்திரசேகர், மாரியப்பன், மனோகரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Comments are closed.