Rock Fort Times
Online News

திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திருச்சியில் ஏராளமான வக்கீல்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி…!

மத்திய அரசு, 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதை ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளது.இந்த 3 சட்ட திருத்தங்கள் நீதித்துறை அதிகாரத்தை முழுவதுமாக பறிப்பதாக உள்ளது. ஆகவே, திருத்தம் செய்யப்பட்ட அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் போன்றவற்றை ஏற்கனவே நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இன்று(08-07-2024) வழக்கறிஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்ஜிஆர் சிலை முன்பு துவங்கிய பேரணி அங்கிருந்து தென்னூர் உழவர் சந்தை வரை சென்றது. இறுதியில், உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், திருத்தம் செய்யப்பட்ட சட்டங்களின்மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக் கூறினர். இந்தப் போராட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஜாக் சேர்மன் நந்தகுமார் சிறப்புரையாற்றினார். முடிவில் ஜாக் பொருளாளர் நன்றி கூறினார்.

 

இந்தப் போராட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவன தலைவருமான வக்கீல் பொன் முருகேசன் துப்பாக்கியுடன் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சுதர்சன், முத்துமாரி, செந்தில், வினிஷ், ராஜலட்சுமி, சாந்தி, கங்காதரன், மூத்த வழக்கறிஞர்கள் மார்ட்டின், கணேசன், கனகசபை, முத்துகிருஷ்ணன், விக்டர், வீராசாமி, மதானி, வீரமணி, மகேந்திரன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் ஆர்.ஏ. கிஷோர்குமார், துணை செயலாளர் சசிகுமார், துணைத்தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர் வக்கீல் பொன் முருகேசன், வழக்கறிஞர்கள் சரவணன், சிக்கல் சண்முகம், வெங்கடேசன், ஜெயராமன், வடிவேல் சாமி, மணிவண்ண பாரதி, அண்ணாதுரை, மகேஸ்வரி வையாபுரி, பெண் வழக்கறிஞர்கள் சங்கதலைவர் ஜெயந்தி உள்பட
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்