Rock Fort Times
Online News

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி மேம்பாடு திட்ட நடைமுறைகள் தாமதமாவதால் பேராசிரியர்கள் பாதிப்பு…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாடு திட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால் தகுதியுள்ள பேராசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக (ஆசிரியர்கள்) நலச் சங்க தலைவர் ஆர்.சக்திவேல், செயலாளர் கே. வெற்றிவேல், பொருளாளர் எஸ்.ஆர். சிவக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள
அறிக்கையில், பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி) விதிமுறைகளின்படி 6 மாதத்திற்கு ஒரு முறை பணி மேம்பாடு (சிஏஎஸ்) திட்ட நடைமுறைகளை செயல்படுத்தி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பணி உயர்வு மற்றும் அவற்றுக்குரிய பணப்பயன்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உரிய காலத்தில் இந்த நடைமுறைகளை மேற்கொள்ளாமல், மிகவும் தாமதமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு செயல்படுத்தும் போது, பேராசிரியர்களுக்கான பணி உயர்வு மட்டும் வழங்கி, அவற்றுக்குரிய பணப் பலன்களை வழங்குவதில்லை. அதன் பின்னர் எப்போது ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறுகிறதோ அதிலிருந்துதான் பணப்பலன்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாக உள்ளது. இதுதொடர்பாக, பல்கலைக்கழக (ஆசிரியர்கள்) நலச்சங்கம் சங்கம் சார்பில் பலமுறை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுநாள் வரை பணி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்புடைய எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவும் இல்லை. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் பேராசிரியராக இருந்து மூத்த பேராசிரியராக பணி உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோன்ற முறையற்ற செயல்களால் தகுதியுள்ள பேராசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு விதிமீறல் இருக்கும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை ஆட்சிக் குழு கூட்டத்தில் பணி மேம்பாடு (சிஏஎஸ்) திட்டம் தொடர்புடைய தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்திவைக்க வேண்டும். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அண்மையில் கடிதம் கொடுத்தும் பதில் இல்லாததால், உயர் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு, நலச் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்