நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று மார்தட்டிய அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. யாருமே எதிர்பார்க்காத வகையில் கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் அதுவும் தனித்துப் போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது. திமுக இரண்டாவது இடத்தை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக கலகலத்து போனது. அதிமுகவை சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் அவர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், திமுக பக்கம் செல்வாரா? தமிழக வெற்றி கழகம் பக்கம் செல்வாரா? என்று தெரியவில்லை.
இந்தநிலையில் தன்னை வெற்றிபெறச் செய்த விராலிமலை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு விஜயபாஸ்கர், வீடுகள்தோறும் பரிசுப்பொருட்கள் அடங்கிய பையை விநியோகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. விஜயபாஸ்கர் புகைப்படம் அச்சிடப்பட்ட அந்தப் பையில் சில்வர் பாத்திரம், குலாப் ஜாமுன் டப்பா மற்றும் ஒரு பேனா ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன் மதிப்பு சுமார் 300 இருக்கும் என்று கூறப்படுகிறது. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், எப்போதும் தங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதியளிக்கும் வகையிலான அச்சிடப்பட்ட கடிதம் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் நாட்களில் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது உண்டு. தற்போது தேர்தல் முடிந்த பிறகு விஜயபாஸ்கர் எதற்காக இந்த பரிசு பொருட்களை வழங்கினார்
என்பதே பலரது கேள்வியாக உள்ளது. ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து மீண்டும் விஜயபாஸ்கர் இந்த தொகுதியில் போட்டியிடலாம், அதற்கு முன்னோட்டமாக இந்த பரிசுப் பொருட்கள் கொடுத்து இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Comments are closed.