Rock Fort Times
Online News

கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து கைதி தப்பி ஓட்டம்… * அடுத்தடுத்த சம்பவத்தால் பரபரப்பு!

வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் கைதி ராகவன். இவர் மீது தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் சில வழிப்பறி வழக்குகள் உள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் ராகவன், கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் விசாரணை முடிந்து கோவை திரும்பும் வழியில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ராகவன் தப்பி ஓடினார். இதனையடுத்து கர்நாடக மாநில காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், அன்னூர் காவல்துறையினர் ராகவனை தேடி வந்தனர். இந்நிலையில் பவானி சாகர் பகுதியில் ராகவன் தலைமறைவாக இருப்பது அன்னூர் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 30) அங்கு சென்ற அன்னூர் காவல்துறையினர், ராகவனை விரட்டிச் சென்று கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ராகவனை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறை வளாகத்தின் முதல் கேட்டை கடந்தவுடன், ராகவனுக்கு அணிவிக்கபட்டிருந்த கைவிலங்கை காவல்துறையினர் அகற்றினர். அப்போது கைதி ராகவன் காவல்துறையினரை ஏமாற்றிவிட்டுத் திடீரெனத் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த காவலர்கள் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போதும், ராகவன் தப்பிச் சென்று தலைமறைவானதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய சிறை வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள நஞ்சப்பா சாலை, விஓசி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், தப்பியோடிய ராகவனைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே சென்னை, புழல் சிறை மற்றும் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து ஒரு சிறை கைதி தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்