தமிழகத்துக்குரிய தண்ணீரை தர கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்- செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்…!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
வெறும் 26 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலம் செலுத்தும் ஜிஎஸ்டி ரூ.1900 கோடி. தமிழ்நாடு செலுத்துவது ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி. ஆனால் அவர்களுக்கு ஒரு லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி தமிழகத்துக்கு எதுவுமே ஒதுக்கப்படவில்லை. பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக
ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக சந்தித்திடாத பெருவெள்ளத்தைக்கூட சந்தித்துள்ள தமிழகத்துக்கு வெள்ளத்தடுப்பு நிதியேதும் ஒதுக்கப்படவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட்டு சென்ற நிலையிலும் இந்த நிதி நிலை அறிக்கையிலாவது நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒதுக்காதது ஏமாற்றம்தான். அவர்களின் ஆட்சியின் ஆயுளை நீடிப்பதற்காக மட்டுமே குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை 2011 ஆம் ஆண்டு முதல் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக விடைத்தாள் திருத்துவதிலிருந்து எண்ணற்ற குளறுபடிகள் நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அங்குள்ள பதிவாளரில் இருந்து பேராசிரியர்கள் வரை அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது தமிழக அரசு. ஆனால், அவர்கள் விசுவாசமாக இருப்பது மத்திய அரசுக்கு.
காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என்று தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். தீர்ப்பை ஒரு மாநில அரசு நடைமுறை படுத்தவில்லை என்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு இதில் வேடிக்கை பார்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு, கர்நாடகத்தை நிர்பந்தித்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். தமிழகத்தில் கூலிப்படை ரவுடிகளை ஒழிக்க வேண்டும். இவர் அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், கலை, வக்கீல் கோவிந்தராஜன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.