Rock Fort Times
Online News

திருச்சி ரயில்வே கோட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி

திருச்சி ரயில்வே கோட்டத்தில் முடிவுற்ற பணிகளை நாளை 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் கூறுகையில், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் (ஏபிஎஸ்) ரயில் நிலையங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி, நாளை (26-02-2024) டெல்லியில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைக்கிறார். அதோடு, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். நாடு முழுவதும் கட்டப்பட்ட சுமார் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப்பாலங்களை நாட்டுக்கு அர்பணிக்கிறார். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி திருச்சி ரயில்வே கோட்டத்தில் புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 4 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விருத்தாசலத்தில்
ரூ.9.17 கோடி, திருவண்ணாமலையில் ரூ.8.17 கோடி, திருவாரூரில் ரூ.8.69 கோடி, கும்பகோணத்தில் ரூ.120.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கும்பகோணத்தில் பயணிகள் வந்து செல்வதற்கான புதிய நுழைவாயில், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), மின்தூக்கிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், நடைமேடைகள் ஆகியவை சீரமைக்கப்படுகிறது. மேலும், ரூ. 224 கோடியில் 7 ரயில்வே மேம்பாலங்கள், 26 ரயில்வே கீழ்பாலங்கள் கட்டப்பட உள்ளது. விழாக்கால ரயில் முன்பதிவு வசதி திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கால்நடைகள் தண்டவாளத்தின் குறுக்கே வருவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. 2023 ஏப்ரல் 22 முதல் 2023 பிப்ரவரி 24ம் தேதி வரை திருச்சி விழுப்புரம் பிரதான (மெயின் லைன்) ரயில் பாதையில் 122 விபத்துகளும் , திருச்சி விழுப்புரம் (காட் லைன்) பாதையில் 62 கால்நடை விபத்துகள் குறித்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபாய சங்கிலி இழுத்ததால் 191 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீரங்கம், கடலூர், சோளகம் பட்டி ஆகிய பகுதிகளில் அதிக கால்நடைகள் ரயில்வே பாதையில் குறுக்கே வந்து விபத்து ஏற்படுகிறது. பாலக்காட்டு கோட்டத்தில் அதிக எடையுள்ள எருமை மாடுகள் மோதுவதால் ரயில் தடம் புரள்கிறது. இவைகளை தடுப்பதற்கு ரயில்வே லைனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஸ்டீல் கம்பி மூலம் பாதுகாப்பு அமைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் கல் எறிந்தது தொடர்பாக அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சி கல்கண்டார்கோட்டை பகுதிக்கு செல்வதற்கான வழி மற்றும் ஜி கார்னரில் சேவை சாலை (சர்வீஸ் ரோடு) விரைவில் அமைக்கப்படும் என்றார். அப்போது ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், முதன்மை திட்ட மேலாளர் ராஜராஜன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்