முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 87வது நிகழ்வாக தெற்கு மாவட்ட, மாநகர தொ.மு.ச. சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று(25-02-2024) நடைபெற்றது. தொமுச பொதுச் செயலாளர் கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கழகத் துணை பொதுச் செயலாளர் கா.பொன்முடி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொமுச பேரவை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மராத்தான் போட்டிகள் 8 முதல் 18 வயது, 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனை அடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை கழக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து வழங்கினர். அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொமுச நிறுவுவதற்கு கருணாநிதி அரும்பாடு பட்டார். முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியத்தையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் தொ.மு.ச. வினருக்கும்,
இந்த விழாவிற்கு வருகை தந்து பங்கேற்ற கழக துணை பொதுச்செயலாளர் பொன்முடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.