காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!
கர்நாடகம், கேரளம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி கர்நாடக அணைகளிலிருந்து
தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்தத் தண்ணீர் மேட்டூர் அணையில் நிரம்பி கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. மேலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் சுமார் 75,000 கனஅடி முதல் 1.25 லட்சம் கன அடி வரை காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அந்தத் தண்ணீர் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்து விடப்பட வாய்ப்புள்ளது. ஆகவே காவிரி, கொள்ளிடம் ஆற்றங் கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கா வண்ணமும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.