தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சிமலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தனியாக வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம்,ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்சல்கான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான 2 சாட்சிகளுடன் என்.ஐ.ஏ.ஆய்வாளர் ரஞ்சித்சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் அப்சல்கான் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ.அமைப்பை சேர்ந்தவர் என்பதால் இவருக்கும் இந்த கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? தீவிரவாத அமைப்புகளில் தொடர்பில் உள்ளாரா? என்பது குறித்தும், அவரது செல்போன் குறுந்தகவல்கள், லேப்டாப் மற்றும் தொலைபேசி எண்களை கொண்டும், வேறு ஏதும் ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் என்.ஐ .ஏ.அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.