Rock Fort Times
Online News

திருச்சி, பழைய பால்பண்ணை பகுதியில் செயல்படும் மனமகிழ் மன்றத்தை அகற்றாவிட்டால் 27-ந் தேதி போராட்டம்…* மாவட்ட கலெக்டரிடம் பாமக நிர்வாகிகள் மனு!

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(22-06-2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது திருச்சி தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது:- திருச்சி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி ஏற்கனவே பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். கலால் துறை அதிகாரியிடமும் முறையிட்டுள்ளோம்.இனியும் தாமதப்படுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மனமகிழ் மன்றத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி வருகின்ற 27-ந் தேதி (சனிக்கிழமை) மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு கொடுக்கும் போது பாமக மலைக்கோட்டை பகுதி செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகள் விஜி, பிரவீன், சரவணன், ஆகாஷ், ரங்கா, தினேஷ்,லோகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்