திருச்சி மாநகராட்சி சார்பில் 10,000 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி…* மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்!
திருச்சி, மாநகராட்சி சார்பில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார். இந்நிகழ்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா தனக்கோடி, ஆணையர் வீர் பிரதாப் சிங், நகர்நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்தப் பணி குறித்து மேயர் கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி ஜனவரி-2025ல் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பு அறிக்கையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20571 தெருநாய்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத 23196 தெருநாய்கள் சுற்றி திரிவதாகவும் ஆக மொத்தம் 43767 தெருநாய்கள் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதாக அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பெறப்பட்ட பிறகு 2025 ம் ஆண்டில் 8698 தெரு நாய்களுக்கும், 2026 நடப்பு ஆண்டில் இதுவரை 3054 தெருநாய்களுக்கும் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 11444 தெருநாய்களுக்கும் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து தடுப்பூசி போடும் பணிகள் நடப்பு ஆண்டில் முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களுக்கு ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசி கடந்த ஆண்டில் 5000 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 10000 தெருநாய்களுக்கு ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Comments are closed.