தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் பிரதமர் மோடி- தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்கள நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், திருநெடுங்குளத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- தீப்பெட்டி சின்னம் மக்களிடம் எளிமையாக சென்று உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரந்தோறும் தமிழகத்திற்கு வருகிறார். அவரை நாங்கள் தடுக்கவில்லை. அவர் வரும்பொழுது தமிழகத்திற்கு ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தால் நல்லது. தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை கொடுத்தால் சரி. ஆனால், அவர் எதையும் செய்யவில்லை. ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். எப்படி அவருக்கு தமிழக மக்கள் வாக்குகள் செலுத்துவார்கள். மத்தியில் பிஜேபியை அடியோடு ஒழிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் மெட்ரோ திட்டம் கொண்டு வந்தால் அதற்குரிய நிதியை வழங்க வேண்டும்.ஆனால் அதற்கு உரிய நிதியை வழங்கவில்லை, வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை, தமிழகத்திற்கு உரிய ஜிஎஸ்டி தொகை 20 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. இப்படி எந்தவித நிதியையும் தமிழகத்திற்கு வழங்காமல் கடன் வாங்குவதற்கும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு செய்து நிதி நெருக்கடியில் தமிழகத்தை சிக்க வைக்க பார்க்கிறார் பிரதமர் மோடி. ஆகவே திமுக கூட்டணியில் போட்டியிடும் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பாளருக்கு அவரது சின்னமான தீப்பெட்டி சின்னத்தை மாலையை அணிவித்து பேசியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிலிண்டர் விலையை ரூ.500 ஆக குறைப்போம் என்றும் பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் விலையை 65 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் சிந்தித்து வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளது. மகளிர் உரிமை தொகை 1.15 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் 1.60 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.400 விற்கப்பட்ட கேஸ் தற்போது ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்துள்ளார்கள். ஆனால் ,பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்து வருட ஆட்சியில் பாஜகவினர் எதையுமே செய்யவில்லை. ஆகவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் 100 சதவீதம் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் அதற்காக தனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின்போது திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி , மதிமுக நிர்வாகி வேலுச்சாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.