அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் போரின் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், ஈரான் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் கூடுதல் விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு தான் பிரதமர் நரேந்திர மோடி, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்ய பழகிக்கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்.
கச்சா எண்ணெய், தொடர் விலை உயர்வைச் சந்தித்தபோதும், கடந்த 11 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ளாமல், மத்திய அரசு பொறுமை காத்தது. எனினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெருமிழப்பு ஏற்படும் அபாயம் நிலவியதால், அவர்களுக்கான சுமையை குறைக்க அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று( மே 15) பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ரூ.3 உயர்த்தி காலையிலேயே பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை உயர வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் 70 சதவீதத்துக்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து சாலை வழியாகவே நடைபெறுவதால், பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

Comments are closed.