Rock Fort Times
Online News

அண்ணாமலைக்கு எதிரான வழக்கை திடீரென ‘வாபஸ்’ பெற்ற டி.ஆர்.பாலு…!

‘டி.எம்.கே. ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜகவின் அப்போதைய தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில், “நானும், எனது மகன் டி.ஆர்.பி. ராஜாவும் மட்டுமே அரசியலில் உள்ளோம். எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலை கூறிய 3 நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார். இதனிடையே, பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிலையில், பாஜகவில் இல்லாத அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த டி.ஆர். பாலு தரப்பில் விரும்பவில்லை. இதையடுத்து, அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக டி.ஆர். பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று( ஜூன் 30) மனு தாக்கல் செய்தார். இதனால், சுமார் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அவதூறு வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்