நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளதால் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு இப்போது இருந்தே செயல்பட தொடங்கி விட்டன. மாநில கட்சிகளை பொறுத்தவரையில் திமுக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். முதல் கட்டமாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
மேலும், அவ்வப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல அறிவுறுத்தியுள்ளார். அதேபோல திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தோற்றால் அதற்கு அந்த மாவட்ட செயலாளரே பொறுப்பு, அவர் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அதிரடி காட்டினார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவராக காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே தேசிய தலைவராக உள்ள நிலையில், இன்று மாநில தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும். கடந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இந்த முறையும் ராமநாதபுரம் தொகுதி கேட்போம். அது கிடைக்கவில்லையென்றால் மாற்று தொகுதியாக திருச்சியை கேட்டுப்பெறுவோம். தமிழகத்தில் அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் என தெரிவித்தவர், இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். இஸ்லாமிய சமூக வாக்குகள் ஒருபோதும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு செல்லாது எனவும் தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.