திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தனியாகவும், தங்கள் குடும்பத்தினருடனும் தங்கியிருந்து வேலைப் பார்த்து வருகின்றனர். 3 வயது குழந்தை ஒன்று அப்பகுதியில் காணாமல் போனது . இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடிய போது முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தது. அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மஞ்சி என்ற 19 வயது பீகார் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Comments are closed.