நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கருத்துக்களை கேட்டறிந்தார். திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் தான் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுக்கும்.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது. 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் புதன்கிழமையில் தேர்தல் நடத்துமாறும், வார இறுதி நாட்களிலோ, வார தொடக்க நாளிலோ வாக்குப்பதிவை நடத்த வேண்டாமெனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் ஜூன் வரையிலான அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.பண்டிகைகள், விடுமுறை நாட்கள் இல்லாத நாளை தேர்வு செய்து தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.