Rock Fort Times
Online News

2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்தி வைப்பு…!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று( ஜூலை 20) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன இந்தநிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 2-வது நாளாக கூடியது. இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் நேற்று போராடினர். அப்போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில், இளைஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டிக்கும் வகையில், அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்