கரூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்….- திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்..!
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “லெட் மேக் கரூர்- ட்ரக் ப்ரீ 2026” (போதையில்லா கரூர்) என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜூலை 21) காலை நடைபெற்றது. இதனை திருச்சி மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு தானும் பங்கேற்றார். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கரூர் எஸ்.பி. டி.என்.ஹரிகிரண் பிரசாத், ஏடிஎஸ்பி பிரபாகரன், ஜெயசந்திரன், டிஎஸ்பி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்று சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் வெங்கக்கல்பட்டி ரவுண்டானா வழியாக சென்று கரூர் ஆயுதப்படை வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஐ.ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒர் அணி, எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஒர் அணி என இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக காவல் துறையினருக்கான கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், கோப்பை ஆகியவற்றை ஐஜி பாலகிருஷ்ணன் வழங்கினார்.

Comments are closed.