Rock Fort Times
Online News

திருச்சி மண்டலத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரிப்படிவம் தாக்கல்…முதன்மை ஆணையர் தகவல்

திருச்சி மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் 10 சதவீதம்பேர் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி. வசந்தன் தெரிவித்தார். வருமான வரித்துறை சார்பில்,வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வருமிமை வரித்துறை முதன்மை ஆணையர் டி.வசந்தன் தெரிவித்துள்ளார் மேலும் பேசியது :

நாட்டின் நிர்வாகத்துக்கு வருமான வரி முதுகெலும்பாக உள்ளது. நாடு முழுவதும் சுமார் 61 கோடி பேருக்கு பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2023-24ம் நிதியாண்டில் சுமார் 8.18 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் சரகத்தில் 30 லட்சத்து 74 ஆயிரத்து 444 பேர் பான் அட்டைகள் வைத்துள்ளதில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 463 பேர் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்துள்ளனர். அதாவது, வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே, மீதி 90 சதவீதம்பேர் தாக்கல் செய்யவில்லை. எனவே, தகுதியுடைய அனைவரும் வருமான வரிசெலுத்த முன் வரவேண்டும். நாடு முழுவதும் தாக்கல் செய்யப்படும் வருமான வரி படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீத படிவங்கள் மக்கள் மீதான நம்பிக்கை காரணமாக மதிப்பீடு செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. எனவே, அதற்கேற்ப பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து வருமான வரியை செலுத்த வேண்டும். பான் அட்டை வைத்துள்ள அனைவரும் வரி செலுத்தினால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் உலக அளவில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக முன்னேற வாய்ப்புள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஜான் ரசல், வள்ளியம்மை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, தொழில் அதிபர்கள் மங்கள் அண்ட் மங்கள் மூக்கப்பிள்ளை, லயன் டேட்ஸ் பொன்னுத்துரை, ஷில்பா ரங்கராஜன், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், மாநகர செயலாளர் ஏ. ஒன்.ஹோட்டல் ஆறுமுகப் பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹக்கீம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் பிரசன்னா, மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ் மொய்தீன், செயலாளர் திருமாவளவன், பொருளாளர் அப்பாதுரை மற்றும் திருச்சி கரூர், அரியலூர், பெரம்பலூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள்,ஆடிட்டர்கள், வரி ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்