தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதை பெருமையாக கருதுகிறேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது ராமர் கோயிலுக்கு செல்ல இருக்கிறேன். கேலோ விளையாட்டு போட்டியை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தருவது வரவேற்புக்கு உரியது. விளையாட்டு துறைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தமாகா ஆதரவு தருகிறது. இந்தியா 140 கோடி ஜனத்தொகை கொண்ட நாடு. அதற்கு வளர்ச்சி தேவை, சாதாரண மக்கள் உயர வேண்டும். அதற்கு பொருளாதாரம் தேவை. 5 வருடத்திற்கு ஒருமுறை ஒரே தேர்தல் வந்தால் பல கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு அதை உபயோகிக்க முடியும். மக்களும் பயன் பெறுவார்கள். ஜல்லிக்கட்டில் உயிர் நீத்த வீரர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழையால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. உரிய நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு ஆலோசனை செய்து கூட்டணி குறித்த முடிவை சரியான நேரத்தில் அறிவிப்போம் என தெரிவித்தார்.
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.