திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(30-06-2024) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம் நகர் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல்கான் என்ற அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று அப்துல்காதருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடகாடு என்ற பகுதியில் அவருக்கு சொந்தமான வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலையில் இருந்து சோதனை செய்து வருகின்றனர்.
இவர் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்துல்காதர் மகன் அப்துல் ரஹ்மான்(25) உறவினர் வீடு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு அப்துல் ரகுமான் வந்துள்ளார். அவர் திருச்சியில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து கொண்ட என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அப்துல் ரஹ்மானின் உறவினர் வீட்டிற்கு வந்து 3 மணி நேரத்திற்கு மேலாக அப்துல் ரகுமானிடம் விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அந்தப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments are closed.