சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 5 இடங்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் 15 இடங்களில் இன்று (28.01.2025) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலைசேர்ந்த ஃபாசித் மற்றும் எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் சீர்காழி பகுதியில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments are closed.