Rock Fort Times
Online News

திருச்சி கேம்பியன் பள்ளியில் 90வது ஆண்டுவிழா கொண்டாட்டம் – நடிகர் சிவகார்த்திகேயன், டைரக்டர் ஆகாஷ் பாஸ்கரன் பங்கேற்பு…!

திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்ற மாணவ- மாணவிகள் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாகவும், சினிமா துறையில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.

1934ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி வருவதோடு 90 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும், மாண்ஃபோர்ட் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இதற்கான ஜூபிலி கொண்டாட்டம் மற்றும் புனித மாண்ஃபோர்ட் அவர்களின் 353-வது பிறந்தநாள் விழா ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இந்த இருபெரும் கொண்டாட்டங்களில் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தலைமை விருந்தினராகவும், சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள் இளங்கலை ஆசிரியர் டி.சேதுராமன் (38 ஆண்டுகள்), இளங்கலை ஆசிரியர் ஏ.ஜான் கிளாதஸ் தனசேகர் (32 ஆண்டுகள்) முதுகலை ஆசிரியர் எஸ்.ஆரோக்கியம் (14 ஆண்டுகள்) ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜனவரி 31-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு திருப்பலியும், காலை 10.15 மணிக்கு ஜூபிலி கண்காட்சியும் தொடங்குகிறது.

பிப்ரவரி 1ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.-15 மணிக்கு திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு மேதகு எல்.அந்துவான் திருப்பலி நிறைவேற்றி, உரோமை நகரில் உள்ள திருத்தந்தையின் வாழ்த்து மடலை வெளியிடுகிறார். மாலை 4.30 மணிக்கு ஜூபிலி கொண்டாட்டமானது திருச்சி மாகாண தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அருட்சகோதரர் எம்.இருதயம் தலைமையிலும், சிறப்பு விருந்தினர் திருச்சி ஜோசப் கல்லூரி தாளாளர் எஸ்.ஜே.பவுல்ராஜ் மைக்கேல், கேம்பியன் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் முன்னிலையிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் முன்னாள் முதல்வர்கள் அருட்சகோதரர்கள் செபாஸ்டின் ஜோசப், ஜான் பெர்க்மான்ஸ், டாக்டர். ஏ.செல்வநாதன், எஸ்.மைக்கேல், எஸ்.சூசைராஜ், ஜெ.ஜேசுராஜ், எம்.அருள், எல்.ஜோசப் சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

 

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்