மயிலாடுதுறை மாவட்டம், காளி அருகேயுள்ள அதியமான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தினசீலன் (31). இவர் சுவாமிமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் தினசீலன் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி பணியாளர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது தினசீலன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சுவாமிமலை காவல் நிலையத்திற்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தினசீலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் போலீஸார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல் தெரியவந்தது. தினசீலன் செல்போன் மூலம் தினமும் ஆன்லைனில் சூதாட்டம் மேற்கொண்டு வந்துள்ளார். ஏற்கெனவே ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் அவர் பணத்தை இழந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த தங்கும் விடுதியிலும், முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அந்த பணத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான வழி தெரியாததால் தினசீலன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.