கோரிக்கையோடு சந்திக்க வந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்…* துணை சபாநாயகர் ரவிசங்கர் செயலுக்கு வலுக்கும் கண்டனம்! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் இருப்பவர் மு.ரவிசங்கர். தொகுதி மக்களின் குரலாக, மாண்போடு செயல்பட வேண்டிய இவர், துளியளவு கூட மனிதநேயம் இல்லாமல், கோரிக்கையோடு தன்னை சந்திக்க வந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் (நவம்பர் 7ம் தேதி) இரவு, மண்ணச்சநல்லூர், பூனாம்பாளையத்தில் உள்ள துணை சபாநாயகரின் வீட்டிற்கு, துறையூர் தொகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற நபர் வந்துள்ளார். தங்கள் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை எனவும், இதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர நினைத்தால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். மேலும், தான் இந்த வழியாக வந்தபோது உங்களது வாகனம் நிற்பதை அறிந்தேன். எனவே உங்களிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்க வந்தேன் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் காதில் கூட வாங்கிக் கொள்ளாத துணை சபாநாயகர் ரவி சங்கர், யார் டா நீ?, எந்த ஊருடா நீ? என பேசிக்கொண்டே, அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த அவர் தற்போது மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் துறையூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட இவர், தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். 24 மணி நேரமும் உங்களுக்காக என் வீட்டுக்கதவு திறந்திருக்கும் எனவும் கூறி வாக்கு கேட்டார். வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே தன்னை சந்திக்க யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் எனக்கூறி தனது இல்லத்திற்கு முன்பு அறிவிப்பு பலகை வைத்து அதிர்ச்சியளித்தார். தற்போது, அதையும் மீறி துணை சபாநாயகரை வீட்டில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என நேரில் சென்ற நபரை கண்மூடித்தனமாக தாக்கி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார். இனி யார் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்தாலும் இதுதான் நிலைமை என மறைமுகமாக தொகுதி மக்களை மிரட்டுவது போல் உள்ள ரவிசங்கரின் இந்த செயல் அனைவரிடமும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து விளக்கம்பெற துணை சபாநாயகரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு அடிப்படை மரியாதை கூட தரமறுத்து, அடித்து விரட்டுவதுதான் நாகரீக அரசியலா? தமிழக அரசியலில் புரட்சி செய்ய வந்த தூய சக்தி, த.வெ.க என மேடைப்போட்டு முழங்கினாலும், துணை சபாநாயகர் ரவிசங்கர் போன்ற நபர்களின் செயல் த.வெ.க.வை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே பார்க்க வைக்கிறது.

Comments are closed.