மக்களவைத் தேர்தலில் ஒரு சீட் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு ஹஜ் கமிட்டி தலைமை பொறுப்பு திமுக அரசால் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் எம்எல்ஏ அப்துல் சமது, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, தங்களுக்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்க வேண்டும் என மமக வலியுறுத்தி வந்தது. திமுக கண்டிப்பாக மமக கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டார். இந்த முறை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்குமே தொகுதியைக் குறைத்துக் கொடுத்து தாங்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக விரும்புகிறது. அதனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட்டு வழங்க முடியாத நிலையில் திமுக உள்ளது. அதையடுத்து அக்கட்சியை சமாதானப்படுத்தும் விதமாக ஹஜ் கமிட்டி தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்போதைக்கு ஹஜ் கமிட்டி தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளுங்கள், சட்டமன்றத் தேர்தலில் சீட் தருவதாக திமுக சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சமது, மணப்பாறை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.