தவெக அரசு பொறுப்பேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்க, அவரைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உரையை தமிழில் வாசித்தார். அத்துடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இன்றைய நாளில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் முதலில் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்ரி, கே. ராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக் கட்ட தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அந்த மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார் முதல்வர் விஜய். முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தில் ”காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.