மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச தயார்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்…!
மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது மட்டுமல்ல. ஒட்டு மொத்த தென்னிந்தியாவுக்கும் நெருக்கமானது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகா தயாராக இருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். இந்த திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் நன்மை ஏற்படும். கன்னடர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகாவிலும், கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வாழ்கிறார்கள். நீர் அனைத்து மக்களுக்கும் தேவையான ஒன்று. மேகதாது திட்டமானது சம நிலை அணை திட்டமாகும். அங்கு நீரை தேக்கினால் வறட்சி காலத்தில் தமிழகத்துக்கு நீரை எளிதாக திறந்து விடலாம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் இருந்து ஒரு வாளி நீரை கூட நம்மால் எடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.