ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மாயாவதி- கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தல்…!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை இரவு பார்வையிடச் சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பெரம்பூர் சென்ற மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார். தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.
Comments are closed.