Rock Fort Times
Online News

உணவு தராததால் மூதாட்டியை கொலை செய்த வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது…!

புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராமர் மனைவி பச்சையம்மாள் (65). இவர், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, ஒரு காலி மனைக்கு காவல் காக்கும் பணி மேற்கொண்டு, அருகிலேயே ஒரு குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 14ம் தேதி இரவு, பச்சையம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஒருவர் அப்பகுதியிலிருந்து வேகமாக ஓடியதும் அவர் யாசகர் போல தெரிகிறது எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதுபோலவே, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார்லால் (40) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்தான் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. கைதான ராஜ்குமார்லால் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட யாசகர். அவர் வீடுகளில் உணவு வாங்கி உட்கொண்டுவிட்டு சுற்றித்திரிபவர் எனக்கூறப்படுகிறது. மூதாட்டி பச்சையம்மாள் ராஜ்குமார்லால்க்கு பலமுறை உணவு அளித்துள்ளார். அன்றைய தினமும் உணவு வாங்கச்சென்றபோதுமூதாட்டி அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து, அவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்