Rock Fort Times
Online News

‘அயன்’ பட பாணியில் வயிற்றுக்குள் வைத்து 306 கிராம் தங்கம் கடத்தல்- விமானத்தில் வந்தவர் சிக்கினார்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், மும்பை உட்பட உள்நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன . அந்தவகையில் நேற்று ( 21.12.2023 )  இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரின் வயிற்றுக்குள் சிறிய அளவிலான உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த  அதிகாரிகள், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட நபரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அங்கு, அவரது வயிற்றுக்குள் இருக்கும் தங்கத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க அனுமதி பெறப்பட்டது. அதன் பிறகு அந்த நபரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், அவருடைய வயிற்றுக்குள் 20 உருண்டைகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர், அந்த உருண்டைகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டன.

அதன்பிறகு, அந்த உருண்டைகளை பிரித்துப் பார்த்தபோது தங்கம் இருந்தது. அந்தக் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் எடை போட்டு பார்த்த போது 306 கிராம் இருந்தது. அந்த தங்கத்தை அவரது வயிற்றுக்குள் வைத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்க சொன்னார்கள்? என்பது குறித்து அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “அயன்” திரைப்படத்தில் சூர்யாவின் நண்பர் வயிற்றுக்குள் தங்கத்தை வைத்து கடத்திச் செல்லும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதே பாணியில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்