திருநங்கைகள் முன்னேற்றத்திற்கான “மனசு செயலி”அறிமுக விழா…* திருச்சியில் நாளை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்..!
கோரோட் அறக்கட்டளை (COROAT), திருச்சிராப்பள்ளியை தளமாகக் கொண்டு 2009 முதல் செயல்பட்டு வரும் ஒரு பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். சமூக உள்ளடக்கம், கல்வி சமத்துவம், மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் கடந்த பதினாறு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வருகிறது. LemonAid Charitea Foundation ஆதரவுடன் நடைபெறும் ‘அவனுள் அவள்’ திட்டம் 10 மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் திருநங்கைகளின் மன ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ‘மனசு’ என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆங்கில மொழியிலும் பயன்படுத்த முடியும். உடலும், மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்து, தன் மீதும், பிறர்மீதும் அன்பும், இரக்கமும் கொள்வதே இந்த செயலியின் அடிப்படை நோக்கமாகும். சூழ்நிலைகளில் உணர்வுவயப்பட்டு எதிர்வினையாற்றாமல், மனதை நிலைப்படுத்தி, அமைதியாக சிந்தித்து செயல்படும் திறனை வளர்க்க இந்த மனசு செயலி உதவுகிறது. இது ஒரு மருத்துவ சிகிச்சையோ, உளவியல் ஆலோசனைக்கு மாற்றோ அல்ல; இது நம் அன்றாட வாழ்வில் மன உறுதியையும், தெளிவையும் கொண்டு வர உதவும் நடைமுறை துணையாகும். இந்த மனசு செயலி அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி எதிரே அமைந்துள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் நாளை (ஜூலை 20) மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. செயலியை மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அறிமுகம் செய்ய, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர் டாக்டர். பெ.மோகனா நாயக் பெற்றுக் கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோரோட் அறக்கட்டளை இயக்குனர் மா. பத்மாவதி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Comments are closed.