Rock Fort Times
Online News

லால்குடி அருகே திருப்பிரம்பிநாதர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகம்…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட திரிபுரசுந்தரி உடனாய
திருப்பிரம்பிநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிசிலமடைந்ததால் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, 2011ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. அதன் பிறகு எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில்
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் திருப்பணி செய்ய கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறையினர் சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 17 லட்சமும், கோவில் அர்த்த மண்டபம், சுவாமி மண்டபம் அம்பாள் சன்னதிக்கு ரூ. 23 லட்சமும் ஒதுக்கினர்.

அதனைத்தொடர்ந்து கடந்த 28 ந்தேதி வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாக பூஜை தொடங்கியது. 30ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து 3, 4ம் கட்ட யாகசாலை பூஜைகள் இன்று(01-07-2024) நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 6.45 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும், விமான கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் கார்த்திகா, மற்றும் சிவாச்சாரியார் விஸ்வநாதர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இந்த கோவில் கும்பாபிஷேகம் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்