சூடு பிடிக்குது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரிகள் ‘டீம்’ விசாரணை…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான், வாழையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிர் இழந்தார்.
இந்த வழக்கு குறித்து 36 பேர் அடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு மலைப்பகுதி என்பதால் பி.எஸ்.என்.எல் இணைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. அதில் 30 பேரின் மொபைல் போன் அழைப்புகள் அடங்கிய 10 டிஜிட்டல் டேப்புகளை திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் சேகரித்துச் சென்றனர். அதனை குஜராத் காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினர். இது தொடர்பாக எஸ்பி மாதவன் அங்கு சென்று நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தால் தான் திருச்சியில் உள்ள
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள பிரதான சர்வரில் இருந்து கூடுதல் தகவல் பெற முடியும் என தெரிவித்தனர். அதன்படி, திருச்சி சிங்காரத்தோப்பில் செயல்படும் பிஎஸ்என்எல் தென்மண்டல மையத்தில் இன்று(02-02-2024) இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்ய சிபிசிஐடி எஸ் பி மாதவன் தலைமையில், தடயவியல் நிபுணர்கள் இருவர் சிபிசிஐடி அதிகாரிகள் என 10 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர். அவர்கள் பிஎஸ்என்எல் இரண்டாம் தளத்தில் சர்வரில் உள்ள விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதன் காரணமாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.