Rock Fort Times
Online News

அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்- பெயர் இதுதான்…!

ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனது அரசியல் நகர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். “தமிழக வெற்றிக் கழகம்” என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் விஜய். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சினிமாவிற்குள் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஸ்டார் நடிகர்களாக மாறியவர்கள் நிறைய பேர். அதில் நடிகர் விஜயும் தற்போது இணைந்திருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை சினிமாவில் வென்றவர் தற்போது அதே ரசிகர்களுக்காக அரசியல் களத்திற்கும் வந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயின் அரசியல் ஆர்வம் பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கத் தற்போது அணையாத் தீயாக மாறி இருக்கிறது. அரசியல் களத்தை நோக்கிய அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் புது உற்சாகத்தைப் பெருக்கெடுக்கச் செய்தது. ‘’விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் உதவவே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும். இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல! அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார் விஜய்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்