தமிழக அரசின் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்- துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் பேச்சு…!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக அவர் பேசுகையில், திராவிட மாடல் நேற்றோ, இன்றோ வந்ததில்லை. திராவிட மாடல் விரைவில் இந்தியாவுக்கான மாடலாக மாறும். திருச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையை விட தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் தொகை மிகமிக குறைவு. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அந்தத் தொகையில் செயல்படுத்தப்படுபவைதான் தமிழ்நாட்டின் திட்டங்கள். அந்த தொகையை அதிகரித்துக்கொடுத்தால் இன்னும் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்ய முடியும். பாஜக ஆட்சிக்கு வரும்போது என்ன சொன்னாங்க. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க, ஆனால் வந்ததா?. சிலிண்டர் விலை இப்போது என்ன? கணக்கு பாருங்க. தம்பி துரை வைகோவுக்காக இங்கே வந்திருக்கிறேன், எனக்காக இல்லை. இதில் என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது. நோ பெய்ன் நோ கெய்ன்.. வலியை தாங்கிக்கொள்ளுங்கள், நாளை நமதே என்று சொல்லியிருக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்பதுதான் என்னுடைய கேள்வி?. இதையெல்லாம் நியாபகப்படுத்தி சொல்ல இங்கே வந்திருக்கிறேன்.
எனக்கு மனிதன் தான் மதம். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அரசியலை விமர்சிக்க வேண்டியது நமது கடமை. சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காகவே வந்திருக்கிறேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். திராவிட மாடல் என்பது ஒரு சிந்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிபார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும். நாங்களாக தேசிய நீரோட்டத்தில் கலக்காதவர்கள் நீங்கள் தான் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். நாட்டை பாதுகாக்க துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில், அமைச்சர் கே.என்.நேரு, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,மேயர் அன்பழகன், பழனியாண்டி எம்எல்ஏ, பகுதி செயலாளர் ராம்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஜவஹர், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமு, மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், அக்காய் சிவா, திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், மக்கள் நீதி மைய நிர்வாகிகள் வக்கீல் கிஷோர்குமார் சினேகன், சுரேஷ் உள்ளிட்ட திமுக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.