திருச்சி காஜாமலை இ.பி காலனி பகுதியில், சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து பூட்டிவிட்டு கோவில் நிர்வாகத்தினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, வெளிக்கதவை உடைத்து உள்ளே சென்று விநாயகர் கருவறையில் இருந்த வெள்ளி குடம், வேல் மற்றும் தங்க மாலியம் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பிறகு இன்று காலை கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது கோவிலில் நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது சாமி கருவறையில் இருந்த பொருட்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கே.கே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோன்று நேற்று இரவுதிருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள மகா விஷ்ணு கோவிலில் மர்ம ஆசாமிகள் சிலர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அம்மன் கருவறையிலிருந்து தங்க தாலி குண்டு மற்றும் மாங்காய் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் இன்று காலையில் வந்து பார்த்தபோது நகைகளை காணததால் அதிர்ச்சி அடைந்து கே.கே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் இரண்டு இடத்திற்கும் சென்று திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். சர்வ சித்தி விநாயகர் கோவிலில் கேமரா இல்லாததால் மர்ம ஆசாமி திருட வந்தது யார் என்று தெரியாமல் போனது? ஆனால் மகாவிஷ்ணு கோவிலில் கேமரா இருந்த காரணத்தால் அதனை போலீசார் ஆராய்ந்த போது கோவிலுக்கு மர்ம ஆசாமி நுழைந்து கருவறைக்குள் சென்று நகை திருடி கொண்டு செல்வது தெரியவந்தது இதையடுத்து போலீசார் இந்த மர்ம ஆசாமியின் அடையாளத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் கே.கே நகர் பகுதியில் ஒரே நாளில் இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.