திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தேவதானம் பகுதியில் ஓயாமரி தகன மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மயான வளாகத்திற்குள்ளேயே பழமையான அரிச்சந்திர மகாராஜா மற்றும் காலபைரவர் கோயில்கள் அமைந்துள்ளன. சத்தியத்திற்காக மயானம் காத்த அரிச்சந்திரன் சன்னதியில் வழிபட்டு, இறுதிச் சடங்குகளைச் செய்வது ஆன்மாவிற்கு நற்கதி அளிக்கும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாகும்.இதன் காரணமாக திருச்சி மாநகர பகுதிகளில் இயற்கை எய்துபவர்களின் உடல்களை இந்து மத சம்பிரதாயப்படி ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்வது வழக்கம். இங்கு கடந்த 1998ம் ஆண்டிலிருந்து மின் எரிவாயு தகன மையம் செயல்பட்டு வருகிறது. 2025 வரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த ஓயாமரி தகன மையத்தை 2025ம் ஆண்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு திருச்சி மாநகராட்சி தாரை வார்த்தது. இதன்பிறகு ஒரு உடலை எரியூட்டி தகனம் செய்ய ரூ.2500 கட்டணமாக வசூல் செய்த ஈஷா ஃபவுண்டேஷன், வெறும் 100 ரூபாயை மட்டும் திருச்சி மாநகராட்சிக்கு செலுத்தி வந்தது. ஓயாமரி மின்சார தகன மையத்திற்கான இடம், கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் அரசின் மூலம் செய்து கொடுக்கப்பட்டு எதற்காக தனியார் அமைப்பான ஈஷா அறக்கட்டளைக்கு தகன மையத்தை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும். கடந்த 2021லிருந்து 2026வரை 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8022 உடல்கள் தகனம் செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.2 கோடியே 55 லட்ச ரூபாய் திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்த ஓயாமரி தகன மையத்தை தனியாருக்கு கொடுக்க கூடாது எனக்கோரி கம்யூனிஸ்ட் கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி கிழக்குத்தொகுதி தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலரான கார்த்திகேயன் ஈஷாவுடன் போடப்பட்ட பராமரிப்பு ஒப்பந்தத்தை அடுத்து வரும் மாமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்வதாக தெரிவித்தார். அதுவரை ஓயாமரி மின்சார தகன மையத்தை மாநகராட்சியே பொறுப்பேற்று நடத்தும் எனவும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். ஆனால் கூட்டம் நடைபெற்று 37 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஓயாமரி மின்சார தகன மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி மீண்டும் ஓயாமரி தகன மையத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருவேளை ஓயாமரி மின் தகன மையத்தை பராமரிப்பதில் மாநகராட்சிக்கு ஏதாவது பொருளாதார சிக்கல் இருந்தால் அதற்கான செலவை ராக்போர்ட் டைம்ஸ் வாசகர்கள் வட்டம் சார்பில் நாங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, இந்து மதத்தை பின்பற்றி ஈம காரியங்களை செய்ய ஓயாமரி தகன மையத்திற்கு வரும் பொதுமக்களின் நம்பிக்கையோடு விளையாடாமல் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மின்சார தகன மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Comments are closed.