திருச்சியில் நள்ளிரவு 12 மணியை கடந்தும் கலையாத கூட்டம்: தொண்டர்களுக்கு விஜய் நிச்சயம் வாய்ப்புகளை வழங்குவார் – புஸ்ஸி ஆனந்த்…!
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்திருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாலை 5 மணி அளவில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், மாலை 6 மணியை கடந்தும் அவர் வருகை தரவில்லை. பின்னர் 7 மணி அளவில் வந்துவிடுவார் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். என்றாலும் இரவு 11-30 மணி ஆகியும் புஸ்ஸிஆனந்த் வரவில்லை. அவரது வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த தனியார் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். பின்னர் அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை கூட நமது தளபதி விஜய்க்காக தியாகம் செய்து உள்ளீர்கள். நமது கட்சியில் உழைப்பவர்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும். இத்தனை நேரம் ஆகியும் எங்களது வருகைக்காக இங்கு கூடியிருக்கும் கூட்டம் மாநாடு வெற்றியை முன் கூட்டியே உறுதி செய்வதாக உள்ளது. உழைக்கும் தொண்டர்களுக்கு நமது தலைவர் நிச்சயம் வாய்ப்புகளை வழங்குவார். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பவர் விஜய் தான். எனவே இங்கு வந்துள்ள அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் மாநாட்டில் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என விஜய் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார். விமான நிலைய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி ஆகியும் ரசிகர்கள், மகளிர் உள்பட ஏராளமானோர் மண்டபத்தில் காத்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Comments are closed.